என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சாலைகள் சேதம்"
- கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது.
- பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு:
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. தலைநகர் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்கள், மலைநாடு மாவட்டங்கள், பெலகாவி உள்ளிட்ட வடகர்நாடக மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.
இதன் காரணமாக ஏற்கனவே பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சாலைகள் சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. மரங்களும், மின்கம்பங்களும் முறிந்து விழுந்துள்ளன.
பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தும் உள்ளன. ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தரைப்பாலங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.
மேலும் கரையோர கிராமங்களையும், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசிக்கும் மக்களை தீயணைப்பு படை வீரர்கள், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் படகு, பரிசல், ரப்பர் படகு உள்ளிட்டவைகளில் சென்று மீட்டு வருகிறார்கள்.
விவசாய நிலங்களில் வெள்ளம் புகுந்து பயிர்களை மூழ்கடித்ததால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
இதுஒருபுறம் இருக்க சார்மடி, சிராடி காட் உள்பட மாநிலத்தில் உள்ள பல மலைப்பாதைகளில் நிலச்சரிவு ஏற்பட்டு இருப்பதாலும், மேலும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாலும் மலைப்பாதை வழியாக வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
உத்தர கன்னடாவில் ஏற்கனவே கனமழையால் அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கனமழையால் உத்தரகன்னடா மாவட்டத்தில் 92 வீடுகள் இடிந்துள்ள நிலையில் நேற்று கார்வார் தாலுகா சென்டியா கிராமத்தில் 4 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. அந்த 4 வீடுகளையும் சுற்றி 3 அடி உயரத்திற்கு மேல் வெள்ளம் தேங்கி நின்றது.
உத்தரகன்னடா மாவட்டத்தில் இன்னும் 439 இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், அதனால் அந்த பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்டு அரசு முகாம்களில் தங்க வைத்து இருப்பதாகவும் மீட்பு குழுவினர் தெரிவித்தனர்.
இதேபோல் பெலகாவி மாவட்டத்திலும் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் பெலகாவி மாவட்டத்தில் ஓடும் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் விளைநிலங்களில் வெள்ளம் புகுந்து பயிர்களை மூழ்கடித்ததால் பல ஏக்கர் நெற்பயிர்கள் நாசமாகின. வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
இன்னும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
- வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி மிதந்து கொண்டிருந்தன.
- குன்னூர் நகரப் பகுதியில் உள்ள 30 வார்டுகளில் 13 வார்டுகள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.
அருவங்காடு:
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலுமே கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் மண் சரிவு, பாறைகள் விழுந்து பாதிப்பு, மரங்கள் முறிந்து விழுவது என பாதிப்புகள் தொடர்ந்து வருகிறது. மாவட்டத்தில் உள்ள ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இடைவிடாது மழை பெய்து வருகிறது. இரவு, பகலும் பாராமல் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கையே முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் இரவு பெய்த கனமழையால் மேட்டுப்பாளையம்-குன்னூர், மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. நடுரோட்டில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் இந்த சாலைகளில் 10 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சீரமைப்பு பணி முடிந்து நேற்று மதியத்திற்கு பிறகே போக்குவரத்து தொடங்கியது. இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் பரிதவிப்புக்குள்ளானார்கள்
குன்னூர் முத்தாலம்மன்பேட்டை, வண்டிச்சோலை, எம்.ஜி.ஆர் நகர், மற்றும் உமரி காட்டேஜ் உள்பட பல இடங்களில் குடியிருப்புகள் சேதமடைந்தது. அந்த பகுதிகளில் உள்ள சொகுசு பங்களாக்கள் மற்றும் வீடுகளுக்குள்ளும் மழைநீருடன் கழிவுநீரும் புகுந்தது.
இதனால் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி மிதந்து கொண்டிருந்தன. தண்ணீர் புகுந்ததால் மக்கள் விடிய, விடிய தூங்க முடியாமல் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர்.
குடியிருப்பு பகுதிகளில் புகுந்துள்ள கழிவு நீர் மற்றும் மழை நீரினை அகற்றும் பணியில் 50-க்கும் மேற்பட்ட நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
குன்னூர் அம்மன் நகர் பகுதியில் அதிகாலையில் ஒரு வீட்டின் மீது பாறை விழுந்து அந்த வீடு சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்த 4 பேரும் உயிர் தப்பினர். குன்னூர் பகுதியில் பெய்த தொடர் மழைக்கு நகரம் மற்றும் கிராம பகுதிகளில் 50 வீடுகள் சேதம் அடைந்துள்ளது. அபாயகரமான குடியிருப்பு பகுதிகள் மற்றும் பள்ளத்தாக்கு பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் மலைப்பாதை மற்றும் மலை சரிவுகளில் ஈரத்தன்மை அதிகரித்து வருவதால் மண் சரிவின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. எனவே பொதுமக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும், மலைப்பாதைகளில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக சென்று வர வேண்டும். அபாயகரமான இடத்தில் வாகனங்கள் நிறுத்த வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து மக்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினரும் ஈடுபட்டுள்ளனர். குன்னூர் நகரப் பகுதியில் உள்ள 30 வார்டுகளில் 13 வார்டுகள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடைகோடி கிராமமான கீழ்கோத்தகிரியை அடுத்து கரிக்கையூர் உள்ளது. இங்கு பெய்த கனமழைக்கு, கரிக்கையூர் செல்லும் சாலையில் மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதனால் அந்த சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 25 மேற்பட்ட பழங்குடியின கிராம மக்கள் சிரமம் அடைந்துள்ளனர். சாலை துண்டிக்கப்பட்டதால் 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு 15 கிலோ மீட்டர் சுற்றியே நகர பகுதிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் மாவட்ட கலெக்டர் அருணா, சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் அந்த பகுதியில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக குன்னூரில் 8.7 செ.மீ மழை பதிவானது. இன்று மழை சற்று குறைந்துள்ளதை அடுத்து குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
- பெருங்குடியில் 1 கி.மீ. தூரம் சாலை போக்குவரத்துக்கு பயனற்றதாக உள்ளது.
- அசோக் நகரில் உள்ள டாக்டர் நடேசன் சாலையில் மழைநீர் வடிகால் பணிகள் முடிந்துள்ளன.
சென்னை:
சென்னையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாகவே விட்டு விட்டு மழை பெய்கிறது. சென்னையில் பல இடங்களில் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருகிறது. மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிக்காக தூண்கள் அமைக்கப்பட்ட இடங்களில் சேதம் அடைந்த சாலைகள் தற்போது போடப்பட்டு உள்ளன.
மேலும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்காகவும் சாலைகளில் பல இடங்களில் பள்ளம் தோண்டப்பட்டு மூடப்பட்டு உள்ளது. முழுமையாக பணி முடிந்த இடங்களில் சாலைகள் போடப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் சென்னையில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல இடங்களில் சாலைகள் சேதம் அடைந்துள்ளன. இதனால் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகின்றன. அந்த பகுதிகளில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
தாம்பரம்- வேளச்சேரி மெயின் ரோட்டில் நாராயணபுரம்- வேளச்சேரி இடையே 1.5 கி.மீ. தூரம் சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இந்த இடங்களில் 2 இடங்களில் சாலைகள் தோண்டப்பட்டு உள்ளன. ஆனால் சாலை முழுக்க மோசமான நிலையில் உள்ளது. மழைநீர் வடிகால் பணி மட்டுமின்றி மற்ற துறைகள் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளுக்காகவும் சாலைகள் தோண்டப்பட்டு உள்ளன.
பெருங்குடியில் 1 கி.மீ. தூரம் சாலை போக்குவரத்துக்கு பயனற்றதாக உள்ளது. குடிநீர் வாரிய பணிகள் முடிந்ததும் சாலையின் ஒரு பகுதி மட்டும் சீரமைக்கப்பட்டது. இதனால் மற்ற பகுதிகள் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள இணைப்பு சாலைகளை தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் பயன்படுத்துகிறார்கள். ஆனால் மழை காலங்களில் இந்த சாலையை பயன்படுத்துவது சிரமமாக மாறிவிடும். அந்த அளவுக்கு சாலை குண்டும் குழியுமாகவும், சேறு- சகதியாகவும் காணப்படுகிறது.
அசோக் நகரில் உள்ள டாக்டர் நடேசன் சாலையில் மழைநீர் வடிகால் பணிகள் முடிந்துள்ளன. அதன் பிறகு சாலை குண்டும் குழியுமாக மாறிவிட்டது. சுமார் 400 மீட்டர் தூரத்துக்கு இந்த சாலை மோசமான நிலையில் உள்ளது.
அம்பத்தூர் எஸ்டேட் சாலையில் உள்ள ஆபீசர்ஸ் காலனி சந்திப்பு சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலை சென்னை நகரின் மிகவும் பரபரப்பான சாலைகளில் ஒன்றாகும். இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று தொடர்ந்து வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இதுபோல சென்னையில் பல பகுதிகளில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது.
சென்னையில் பல சாலைகள் மழைக்கு பிறகு குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் சாலையில் வாகனங்களை ஓட்டுவது மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் மழைநீர் தேங்கி கிடக்கும் போது சாலையில் உள்ள பள்ளங்கள் தெரியாததால் இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்தை சந்திக்கிறார்கள். எனவே போர்க்கால அடிபடையில் குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறுகையில், 'சென்னையில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகள் முன்னுரிமை அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருகிறது. தேவையான இடங்களில் உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றார்.
- இந்த பள்ளங்களில் வாகனங்களை ஓட்டி விழுந்து பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.
- நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுத்து சேதமடைந்த ரோடுகளை சீரமைக்க வேண்டும் என்றனர்.
பல்லடம்:
பல்லடத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்தது. இதனால் பல்லடத்தில் இருந்து , திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை, தாராபுரம், அவினாசி என, பல்வேறு முக்கிய நகரங்களுக்கு செல்லும் ரோடுகள் அனைத்தும் மழை காரணமாக கடுமையாக சேதமடைந்துள்ளன. ரோட்டில் ஆங்காங்கே பள்ளங்கள் உருவாகி, வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகின்றன. பலர் இந்த பள்ளங்களில் வாகனங்களை ஓட்டி விழுந்து பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: -
பல்லடத்தில் ரோடுகள் அனைத்தும் கடுமையாக சேதமடைந்துள்ளன. ரோட்டில் ஏற்பட்டுள்ள பெரும் பள்ளங்களால் பல்வேறு இடங்களில் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுத்து சேதமடைந்த ரோடுகளை சீரமைக்க வேண்டும் என்றனர்.
இது குறித்து நெடுஞ்சாலை துறையினர் கூறுகையில், தொடர் மழை காரணமாக பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை. தற்போது மழை குறைந்துள்ளது. விரைவில் பராமரிப்பு பணிகள் நடைபெறும். அனைத்து ரோடுகளும்சீரமைக்கப்படும். இவ்வாறு நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்தனர்.
சென்னை ‘பெருநகரம்’ என்ற அந்தஸ்தை பெற்றாலும் கூட சாலை தரம் இன்னும் உயர்த்தப்படவில்லை. நகரின் உட்புற சாலைகள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றன. குண்டும் குழியுமான சாலைகளில் இரு சக்கர வாகனங்கள், கார் போன்றவை செல்லும் போது பாதிக்கப்படுகின்றன.
மழை காலம் தொடங்கி விட்டதால் குழிகளில் நிரம்பி நிற்கும் தண்ணீரில் வாகனங்கள் செல்லும்போது பொதுமக்கள் தடுமாறி கீழே விழுகின்ற நிலை உள்ளது.
சாலையை துண்டித்து கேபிள் மற்றும் சாக்கடை கால்வாய் அடைப்பு போன்றவற்றை சரி செய்வதற்காக தோண்டப்பட்ட குழிகளால் மிகவும் மோசமாக காணப்படுகின்றன. குறிப்பாக மோட்டார் சைக்கிளில் செல்லக்கூடியவர்கள் மழை நேரத்தில் பள்ளம் தெரியாமல் வாகனத்தோடு விழுகிறார்கள்.
சென்னையில் 387 கிலோ மீட்டர் தூரத்திற்கு 471 போக்குவரத்து சாலைகளும் 5500 கிலோ மீட்டர் தூரத்திற்கு 3174 உட்புற சாலைகளும் உள்ளன. இந்த சாலைகளில் முக்கிய ரோடுகளில் பள்ளங்கள் அதிகளவு இருக்கின்றன.
அதனை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து உடனுக்குடன் சாலைகளை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். மழைக்கு பிறகு சாலை மிக மோசமானதாக காணப்படுகிறது. அவற்றை போர்க்கால அடிப்படையில் உடனே செப்பனிட வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கிறார்கள்.
முகப்பேர் மேற்கு, சூளைமேடு மார்க்கெட் ரோடு, பெரம்பூர் பேரக்ஸ்ரோடு, ஸ்டீபன் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் விபத்துகள் அதிகம் ஏற்படுகின்றன.
இது குறித்து மாநகராட்சி உயர் அதிகாரி கூறுகையில், மாநகராட்சி பகுதியில் போடப்படும் சாலைகள் தரமாக இருப்பதால் உடனே பாதிப்பு ஏற்படவில்லை. சாலைகளின் குறுக்கே வெட்டுவதால் ஒரு சில இடங்களில் குழிகள் ஏற்பட்டு இருக்கின்றன. 90 சதவீத சாலைகள் நன்றாக இருக்கின்றன. ஒரு சில சாலைகள் மட்டுமே சேதமடைந்து இருக்கின்றன. சாலைகளை சீரமைக்க ரூ.200 கோடிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.
மழைக்காலம் முடிந்தவுடன் 3 ஆயிரம் உட்புற சாலைகள் 20 போக்குவரத்து சாலைகள் சீரமைக்கப்பட உள்ளன. ஜனவரி மாதம் 15-ந்தேதிக்கு பிறகு இந்த பணிகள் தொடங்கும் என்றார். #Rain
நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி ஒன்றியப் பகுதிகளில் ஊரக வளர்சசித்துறையின் சார்பில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சீர்காழி ஒன்றியம் மருவத்தூரில் ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.35.85 லட்சம் மதிப்பீட்டில் மருவத்தூர் முதல் குமாரநத்தம் வரையில் சாலை அமைக்கும் பணிகளையும், எடக்குடி வடபாதி ஊராட்சியில் ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.26.85 லட்சம் மதிப்பீட்டில் தென்பாதி மேலத்தெரு சாலை அமைக்கும் பணிகளையும், காத்திருப்பு கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.3.70 இரட்டைவாய்க்கால் தூர்வாரும் பணிகளையும், கலெக்டர் பார்வையிட்டார். மேலும் திருவெண்காடு முத்தையா நகரில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு (2017-18) நிதியின்கீழ் ரூ.10.08 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்காடி கட்டிடத்தையும், திருவாலி முதல் நெப்பத்தூர் வரை பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டு (2017-18) திட்டத்தின்கீழ் ரூ.133.35 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகளையும் மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் பார்வையிட்டு பணிகளின் தரத்தினை சோதனை செய்தார்.
நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புதிய தார்சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. வயல்களில் உழவு பணிகளுக்காக டிராக்டர்களில் இரும்பு சக்கரத்தினை பொருத்தி சாலைகளின் வழியாக வயல்களுக்கு எடுத்துச்செல்லப்படுவதால் சாலைகள் மிகுந்த சேதத்திற்கு உள்ளாகின்றன. இதனை தவிர்க்கும் வகையில் சாலைகளில் கேஜிவீலை பொருத்தி டிராக்டரை எடுத்துச் செல்வதை அனைவரும் தவிர்க்க வேண்டும். மீறி சாலைகளில் கேஜிவீலை பொருத்தி டிராக்டர்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது நாகை மாவட்ட செயற்பொறியாளர் செல்வராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஞானசெல்வி, ரெஜினா ராணி, பொறியாளர் முத்துகுமார், ஓவர்சியர் சந்திரசேகர், சாலை ஆய்வாளர் சங்கீதா ஆகியோர் உடன் இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்